Friday, 16 September 2016

Pains of pregnancy !

கர்ப்பக் காலத்தில் பல்வேறு வலிகளை கர்ப்பிணிகள் அனுபவிக்க நேரிடும். முக்கியமாக மார்பக வலி, முதுகுவலி, தலைவலி, கால்களில் வலி ஆகியவற்றைக் கூறலாம். பெண்ணின் மார்பகம் கருத்தரித்த பிறகுதான் முழுமை அடைகிறது. அதில் நிறமாற்றமும் ஏற்படும். மார்பகப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் இரத்த அழுத்தம் அதிகமாகும். இதனால் இரத்த நாளங்கள் வீங்கி தொட்டாலே வலிக்கும்.

மார்பகங்களைச் சுற்றி சின்னச் சின்ன முடிச்சுகள் தோன்ற ஆரம்பிக்கும். இது ஏதோ கட்டிகள் என பல பெண்கள் பயந்துவிடுகிறார்கள். இது மார்பக மாற்றத்தின் ஒரு பகுதி. எனவே பயப்படத் தேவையில்லை. கரு வளரும்போது கூடவே வளரும் கருப்பையானது வளர்ந்து முன்னோக்கித் தள்ளுவதால் உடல் தனது சமநிலையை இழந்துவிடும். இதனால் முதுகு வலிக்கும். இவ்வாறே கருப்பையின் அழுத்தத்தால் இரத்த நாளங்கள் அமுக்கப்பட்டு கால்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும். இதனால் கால்கள் வலிக்கும்.

குழந்தையின் தலைப்பகுதி பெரிதாகும் போது திரவங்கள் அதிகமாவதாலும், நாளங்கள் சுருங்குவதாலும் அங்கு இரத்தத் தேக்கம் உண்டாகி கால்கள் வீங்க ஆரம்பிக்கும். இதை வெரிக்கோஸ் வெயின் என்பார்கள். சருமத்தின் மேல் இந்த நாளங்கள் வீங்கிப் புடைத்துக் காணப்படும்போது அது நீலநிறமாகத் தோன்றும். இதனால் கால் வலி அதிகமாகும்.

இதைத் தவிர்ப்பதற்கு நீண்ட நேரம் நிற்காதிருத்தல், கால்களை உயர வைத்து ஓய்வெடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் பிரச்சனை பிரசவத்திற்குப் பிறகு சரியாகிவிடும். இல்லாவிட்டால் இரத்த நாள நிபுணரை அணுக வேண்டியிருக்கும்.

கர்ப்ப கால மாற்றங்கள் காரணமாக, கருவுக்கு சில பொருட்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால் ஏதேனும் சில பொருட்களை முகர்ந்தாலோ, அருந்தினாலோ கூட தலைவலி வந்துவிடும். இவையெல்லாம் கர்ப்பக் காலத்தில் இயல்பாக வருபவையாகும்.

சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். இதற்குக் காரணம் கரு வளர்ச்சியின் போது கருப்பையானது மேல் நோக்கி அழுத்துவதால் நுரையீரல் முழுமையாக விரிவடையாத நிலை உண்டாவது. ஆஸ்துமா நோய் இல்லாமல் இவ்வாறு இருப்பதும் இயல்பானதுதான்.

Uninvited -Term pregnancy diabetes

கர்ப்பக் காலத்தில் அழையா விருந்தாளியாக வந்துசெல்லும் நோய், கர்ப்பக் கால சர்க்கரை நோய். நாம் சாப்பிடும் உணவு குளுகோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. கணையத்தில் சுரக்கும் இன்சுலின் இந்த குளுகோஸை நம்முடைய உடல் திசுக்கள் பயன்படுத்தும்படி செய்கிறது. 

பெண்கள் 30 வயதுக்கு மேல் கர்ப்பம் அடைதல், அதிக எடை உள்ள பெண்கள், முந்தைய கர்ப்பகாலத்தில் ஏற்கெனவே சர்க்கரை நோய் இருந்தாலோ, மனநல நோய் அல்லது ஸ்டீராய்ட் மருந்து உட்கொண்டிருந்தாலோ அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் பிரச்னை இருந்தாலோ அவர்களுக்குச் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கர்ப்பக் காலத்தில் நஞ்சுக்கொடி, குழந்தையின் வளர்ச்சிக்காகப் பல்வேறு ஹார்மோன்களை சுரக்கிறது. கிட்டத்தட்ட இந்த அத்தனை ஹார்மோன்களும் இன்சுலின் செயல்பாட்டைப் பாதித்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதையே கர்ப்பக் கால சர்க்கரை நோய் என்கிறோம்.

பொதுவாக, கர்ப்பக் காலத்தின் 20-வது வாரத்தில் இது ஏற்படும். பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகு இது மறைந்துவிடும். பெரும்பாலான கர்ப்பக் கால சர்க்கரை நோயை ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம்.25 வயதைக் கடந்தவர்கள், பெற்றோருக்கு சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள் ஆரம்பத்திலேயே இதுபற்றி டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். 

கருத்தரித்த பெண்கள் அனைவரும் ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொள்வது மிகமிக அவசியம்.கருத்தரித்த 24-வது வாரத்தில் இருந்து 28-வது வாரத்துக்குள்ளாக 'இனிஷியல் குளுகோஸ் சேலன்ஜ்' டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும். 

இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் 'குளுகோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்' செய்துகொள்ள வேண்டும். கர்ப்பக் காலத்தில் சர்க்கரையைத் தவிர்க்க, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உணவில் நார்ச் சத்து அதிகமாகவும், கொழுப்பு மற்றும் கலோரி குறைவாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டாம்.

The risk of obesity in children

அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்க ஆபத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். முக்கியமாக கூடுதல் எடையுடன் குழந்தைகள் பிறந்து, பின் அவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து காப்பாற்ற வேண்டிய நிலை உண்டாகும். பல்வேறு நோய் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியில்லாத குழந்தையாக வளர அதிக வாய் ப்பு உள்ளது. கூடிய விரைவில் இதயம் சார்ந்த பிரச்னைகளை தாய் மட்டுமல்லாது குழந்தையும் சந்திக்க வேண்டி இருக்கும்.எனவே கர்ப்பக்காலத்தின்போதே ஆரோக்கியமான உணவுகளை உண்டு, உடல் எடையை சராசரியாக பராமரித்து வந்தால் குழந்தைப் பேறு எளிது என்கின்றனர். 

முதல் முதலாக கருவுற்றிருக்கும் பெண்களில் பலருக்கு ஏற்படும் பயம், பிரசவத்தின்போது சிசரியன் செய்ய நேரிடுமோ என்பதுதான். அதிலும் பருமனான பெண்களுக்கு சிசரியன் வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த பயம் கண்டிப்பாக இருக்கும். சிசரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுகிறார்கள். அதிக ரத்தப்போக்கால் உடலில் ரத்த அளவு குறைந்து போவது, அறுவைச் சிகிச்சை செய்யப்படும் வயிற்றுப் பகுதியில் புண் நாளடைவில் ஆறாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் சுகப்பிரசவம் எளிது என்கின்றனர். 

எடை அதிகரிக்காமலும் ஆரோக்கியமாகவும் இருக்க 3 விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும் சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமானது பசி வரும்போது சாப்பிட்டு விட வேண்டும். பசி வந்து நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு டாக்டர்கள் கூறும் அறிவுரைப்படி டயட் உணவு சாப்பிட வேண்டும் . இரண்டாவது விஷயம் அடிக்கடி அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் .இது கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை பாதுகாப்புடன் சுமந்திருக்கும் பனிக்குடத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் அதாவது இரண்டரை முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.

மூன்றாவது விஷயம் நிறைய நடக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் ஓய்வெடு என்றுதான் கூறுவார்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடை பயிற்சி மற்றும் சில முக்கியமான உடற்பயிற்சிகளை தகுந்த ஆலோசனையின் பேரில் செய்வது முக்கியமானது. உங்களது உடலின் தசைகளை உரிய முறையில் வலுப்படுத்தவும், இயங்க வைக்கவும் இது உதவுகிறது. மேலும், குழந்தை சரியான பொசிஷனில் இருப்பதற்கும் இது உதவுகிறது. இயற்கை பிரசவத்திற்கு அது வழி கோலும் என்பதும் மருத்துவர்களின் கருத்து.

Cause of Tablet- In Pregnancy

பெண்களுக்கு கர்ப்பக்காலங்களில் மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்ளும் மாத்திரைகளே ஆபத்தை விளைவிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக இரும்புச்சத்து குறைபாட்டுக்கு கொடுக்கப்படும் மாத்திரை ஆபத்தை தருகிறது என்கிறது ஆய்வு. இந்தியாவில் 33 சதவீத கர்ப்பிணிகள் அனிமீயா என்னும் ரத்த சோகையால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமாகும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. 

பெண்களுக்கு ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே போகும். இதனால் அடிக்கடி சோர்வுறுதல், 
மயக்கம், இடுப்பு மற்றும் கை, கால் வலி ஏற்படும். உடலில் ஏற்படும் சிறு வலியைக் கூட தாங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். இதைத் தடுப்பதற்காக 
இரும்புச்சத்து மாத்திரைகள் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 9 மில்லி கிராம் இரும்புச்சத்து சாதாரண பெண்களுக்குத் தேவைப்படும். 

இதுவே கர்ப்பிணியாக இருந்தால் நாளொன்றுக்கு 27 மில்லிகிராம் வரை இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இதனால் மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக் 
கொள்ளும் போது அது உடலில் நச்சுத் தன்மையாக மாறி உடலில் உள்ள வாயுவை அலர்ஜியுறச் செய்து பல தீங்குகளை உண்டாக்குவதாக கூறுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை. இதனால் மலச்சிக்கல், வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகி கருவில் உள்ள 
குழந்தைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து மாத்திரையை தவிர்க்க வேண்டும் என்று 
தெரிவித்துள்ளனர்.